ரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா!

By Vishnu

19 Jan, 2020 | 09:32 PM
image

ரோகித் சர்மாவின் சதம் மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியஅணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.

மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருக்க தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்றைய தினம் பெங்களூரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்தது.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தவான் களத்தடுப்பில் ஈடுபடும்போது தோற் பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.

ரோகித் மற்றும் ராகுலின் சிறப்பான ஆரம்பத்தினால் இந்திய  அணி 10 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களை குவித்தது. எனினும் 12.3 ஆவது ஓவரில் ராகுல் 18 ஓட்டத்துடன் அஷ்டன் அகரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 69 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலியுடன் கைகோர்த்த ரோகித் சர்மா 29.2 ஆவது ஓவரில் ஒருநாள் அரங்கில் தனது 29 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்களை பதிவுசெய்த வீரர் பட்டியலில் அவர் சனத் ஜயசூரியாவை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 49 சதத்துடன் முதலாவது இடத்திலும், விராட் கோலி 43 சதத்துடன் இரண்டாவது இடத்திலும், ரிக்கி பொண்டிங் 30 சதத்துடன் மூன்றாவத இடத்திலும் உள்ளனர்.

இந் நிலையில் சதத்தை பதிவுசெய்ததுடன் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா 36.4 ஆவது ஓவரில் மொத்தமாக 128 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் (206-2).

தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்காக ஸ்ரேயஸ் அய்யர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, வெற்றிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, 45.5 ஓவரில் மொத்தமாக 91 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டத்துடன் ஹேசல்வூட்டின் பந்தில் போல்ட் ஆனார்.

கோலியின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 47.3 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆடுகளத்தில் ஸ்ரேயஸ் அய்யர் 44 ஓட்டத்துடனும், மனிஷ் பாண்டே 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருக்க அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் அடம் ஷாம்பா, ஹேசல்வூட், அஷ்டன் அகர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் மாற்றத்தை ஏற்படுத்திய வீரராக ஜடேஜாவும், ஆட்டநாயகனாக ரோகித் சர்மாவும், தொடரின் ஆட்ட நாயகனாக விராட் கோலியும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right