ஜனாதிபதியினால் காணாமல் போனோர் என்று யாரும் இல்லை என்று ஐ.நா தூதுவரிடம் தெரிவித்த கருத்துக்கு கன்டனம் தெரிவிப்பதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் 1055வது நாளாக காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்படும் போராட்ட கொட்டகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷவினால் காணாமல் போனோர் என்று யாரும் இல்லை என்று ஐ.நா தூதுவரிடம் தெரிவித்த கருத்துக்கு கன்டனம் தெரிவிப்பதோடு அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் போன பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அல்லது கண்டுபிடித்து தந்தால்தான் நாங்கள் ஆச்சர்யப்பட வேண்டுமே தவிர அவர்கள் இல்லை என்று சொல்வதை நாங்கள் எதிர்பார்த்ததுதான்.

தமிழ் மக்களின் வாக்குகளினால் வந்த கடந்த அரசாங்கமும் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்திருந்தது. தற்போது சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வந்தவர்களும் காணமல் போனோர் இல்லை என்று தெரிவித்திருக்கின்றமை ஆச்சிரியப்படுவதற்கல்ல. 

பல்கலைக்கழக மாணவர்களினால் 19வது பொங்குதமிழ் நினைவுதினம் செய்திருந்தனர். இதன் போது எதிர் காலத்தில் பாரிய அளவில் பொங்கு தமிழ் ஒன்றை செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர். பொங்கு தமிழ் நிகழ்வை செய்வதை விட நாங்கள் தமிழ் மக்களிற்கான தீர்வை எப்படி பெறப்போகின்றோம் என்ன வழிகளில் பெறப்போகின்றோம் என்பதைதான் தமிழ் தலைமைகளும் கல்விச்சமூகமும் தமிழ் மக்களிற்கு கூறவேண்டிய தேவை இருக்கின்றது. 

ஏனென்றால் வெளிநாடுகளின் மூலம்தான் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம். நாங்கள் ஒருமித்த குரலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளை கூப்பிடுவதன் மூலம்தான் தமிழர்களிற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

1055 நாளாக இரவு பகல் பாராது தெருவில் இருந்து காணாமல் போன உறவுகளின் போராட்டி கொண்டிருப்பவர்களிற்கு காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை அவர்களிற்கு நிவாரணம் வழங்கப்போகின்றோம் என்ற கருத்தானது பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே இதனை உணர்ந்து சிவில்சமூகம் மற்றும் கல்விச்சமூகம் சர்வதேச சமூகத்தை அழைத்து தமிழ் மக்களிற்கான தீர்வையும் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நிரந்தர தீர்வையும், அந்த பிள்ளைகளை கண்டு பிடிப்பதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.