மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமேசுவரம், தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து ஒரு படகு கைப்பற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்துள்ளதுடன் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றைய மீனவர்கள் தாங்களும் சிறைபிடிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் கரை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து எங்களை எச்சரித்தனர். இதனால் நாங்கள் மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு திரும்பும்போது, 6 மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன. இதற்கு எப்போது தான் விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளது.