(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க நாங்கள் இணைந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திர கட்சியுன் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவ ஹிங்குரங்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் இல்லை. நான் ஜனாதிபதியாக இருந்தபோது ஏற்பட்டதுதான் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. நான் ஜனாதிபதியாக தெரிவாகும்போது பாராளுமன்றத்தின் அதிகாரம் எனக்கு  இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு 142 உறுப்பினர்கள் இருந்தார்கள். என்றாலும் பாராளுமன்றத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கினேன். அப்போது அவருக்கு 47 உறுப்பினர்களே இருந்தார்கள். என்றாலும் 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தல் வரைக்கும் மஹிந்த ராஜபக்ஷ் எனக்கு ஆதரவளித்துவந்தார்.

அதனால் தேவையான பல சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கிகரித்துக்கொள்ள முடியுமாகியது. தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் அந்த நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது. அவருக்கு பாராளுமன்றத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் அவருக்கு வேலைசெய்யக்கூடியவகையில் பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதனால்தான்  நாங்கள் இணைந்து செயற்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.