(செ.தேன்மொழி)

நாடு பெரும் பொருளாதார சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சஷ் டி சில்வா தெரிவித்தார்.

அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 4.8 பில்லியன் டொலர்கள் சர்வதேச கடன் மீள் செலுத்தும் தொகையாக காணப்படுவதாக தெரிவித்த அவர் , அரசாங்கம் நாட்டில் உள்ள பிரச்சினையை கருத்திற் கொள்ளாது தேர்தல் இலாபத்திற்காக வரி சலுகைகளை பெற்றுக் கொடுத்தமையினால்  600 பில்லியன் ரூபாயினை இலங்கை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நடைமுறை கடன்களை செலுத்துவதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. ஆனால் மக்கள் எம்மை நிராகரித்து ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளனர். 2020 தொடக்கம் 2023 ஆம் ஆண்டிற்குள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமை இலங்கை சர்வதேசத்திற்கு ஆறு பில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதன்போது அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர்களும் தனியார்த்துரை 1.2 பில்லியன் டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளது. 

தனியார்த்துறைகள் தமது வணிக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சர்வதேசத்தில் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளன.

ஆனால் இந்த அணைத்து கடன்களையும் செலுத்த வேண்டியது மத்திய வங்கியின் பொறுப்பாகும். இந்நிலையில் நாம் எவ்வாறு இந்த கடன்களை செலுத்துவது என்பது தொடர்பில் சிந்தித்து பார்த்தால்.

அரசாங்கம் மீண்டும் சர்வதேச சந்தையிலிருந்து பல டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்திலிருந்து வருமானம் கிடைக்கப்பெற்றாலும் தொடர்ந்தும் அது உறுதியாக கிடைக்கும் என்று கருதமுடியாது. ஈரான் - அமெரிக்கா பிரச்சினைகளின் ஊடாக அதற்கும் பாதிப்பு ஏற்படலாம். 

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பிறகு சுற்றுலாத்துறையும் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.

தற்போது தான் அதில் ஓரளவு மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. உலக தரப்படுத்தல் வரிசையிலும் நாம் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம்.

2018 ஆம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சிகள் இதற்கு பெரிதும் தாக்கம் செலுத்தியிருந்தன. இந்நிலையில் தனியார் துறையை பொருத்தமட்டில் அவர்களிடம் டொலர்கள் மற்றும் ரூபாய்கள் இருக்கின்றன.

அவர்கள் அதனை கொண்டு ஓரளவு கடன்களை கட்டினாலும் , அரசாங்கத்திடம் டொலர் மற்றும் ரூபா இரண்டுமே குறைவாகவே உள்ளது. அதனால் அதனை செலுத்துவதில் அரசாங்கத்திற்கு சிரமம் ஏற்படும்.

இதனை கருத்திற் கொள்ளாது தேர்தல் இலாபத்திற்காக தற்போது வரிச் சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். வரி சலுகை கொடுக்கப்பட்டுள்ள போதும் இதன் பயன்கள் இதுவரையில் நுகர்வோரைச் சென்றடைய வில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இவ்வாறு வரி சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பயன்கள் மக்களுக்கும் சென்றடையவில்லை. ஆயினும் இதனால் அரசாங்கத்திற்கு 600 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும்.

நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் உலக நாடுகளிள் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.