(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கட்சிக்கு எதிராக செயற்பட்டோருக்கு எதிராக அடுத்த மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என தெரிவித்த பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஒழுக்காற்று குழுவின் அறிக்கைக்கு ஏற்ப இவ்வாறானவர்களை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். 

சனிக்கிழமை கூடிய ஒழுக்காற்று குழு கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தீர்மானங்களை எடுத்துள்ளதா என்பது தொடர்பில் வினவிய போதே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்படுகின்ற இராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கு சனிக்கிழமை சு.கவின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது. 

எனினும் குறித்த நால்வரும் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக தமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்வதற்கான ஆவணங்களை ஒழுக்காற்று குழுவில் சமர்பித்திருந்தனர். 

ஒழுக்காற்று குழு முற்றிலும் சுயாதீனமானது. அதன் நடவடிக்கைகளில் எம்மால் தலையிட முடியாது. எனினும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஒழுக்காற்று குழுவால் அறிக்கையொன்று தயாரிக்கப்படும். அந்த அறிக்கை கட்சியின் மத்திய குழுவில் சமர்பிக்கப்படும். 

சமர்பிக்கப்படும் அறிக்கை மற்றும் ஒழுக்காற்று குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா அல்லது வேறு தீர்மானங்களை என்பது தொடர்பில் ஆராயப்படும். எனவே அடுத்த மத்திய குழு கூட்டத்தில் இவர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.