இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஹாரேயில் ஆரம்பமாகியுள்ளது.

சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

சிம்பாவ்வேக்கு எதிராக இதுவரை இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இலங்கை, வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் சிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

இலங்கை அணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரையும் 1:1 என்ற அடிப்படையில் சமப்படுத்தியது.

எனினும் டிசம்பர் மாதம் ஆரம்பமான பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 1:0 என்ற கணக்கில் இலங்கை இழந்தது. இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ள இலங்கை டெஸ்ட் அணியை ஸ்தரப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக சிம்பாப்வேயுடனான இந்த தொடர் அமைந்துள்ளது. 

இதேவேளை சிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ஐ.சி.சி.) மூன்று மாத தடைக்குப் பின்னர் அந்த அணியினர் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது சிம்பாப்வேக்கு அமைந்துள்ளது. 

இறுதியாக சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு, பிரேமதாச மைதானத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின்னர் சிம்பாப்வேயுடன் இடம்பெற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 3:2 என்ற கணக்கில் இழந்தது.

அந்த தொடரின் பின்னர் இரு அணிகளிலும் அநேகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்வே அணி சற்று முன்னர் 14 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை குவித்துள்ளது.