கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு சட்ட விரோதமான முறையில் சங்குகள் சிலவற்றைக் கடத்திய கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர், நேற்று (18) சனிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் பெட்டியொன்றுடன் சென்ற நபரை விசாரணை செய்த காவல் கடமையில் நின்ற பொலிஸார், பெட்டியில் சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த சங்குகளைக் கைப்பற்றியுள்ளனர். 

இதையடுத்து, மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ. குமாரசிறி, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி ஆகியோரின் பணிப்பின் பேரில் ஐ.பி. பண்டார தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றன. 

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேக நபர், கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த முஹம்மது பாறூக் முகம்மது சல்மான் எனவும், இவர் இந்த சங்குகளை வியாபாரத்திற்காகக் கொண்டு வந்துள்ளார் எனவும், ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.