பிரிட்டனின் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் கோரிக்கைக்கு எலிசபெத் மகாராணி வழங்கிய அனுமதியை தொடர்ந்து அவர்கள்  சுதந்திரமான எதிர்காலத்தை மேற்கொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் இனி தங்கள் "ரோயல் ஹைனஸ்" பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராணி  தமது அறிக்கையில்,

ஹரி மற்றும் மேகன் இன்னும் அரச குடும்பத்தில் உறுப்பினர்களாக உள்ளனர், ஆனால் அவர்கள் இனி அரசர்களாக இல்லை, என தெரிவித்துள்ளார். 

ஹரி ஒரு இளவரசனாக இருப்பார், தம்பதியினர் வட அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதால் அவர்கள் தங்கள் பட்டங்களை வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் அரச  நிகழ்வுகள் அல்லது அரச சுற்றுப்பயணங்களில் பங்கேற்க மாட்டார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி ராணியை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றாலும், அவர்கள் அரசகுடும்பத்தின் கௌரவத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்" என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

தம்பதியினர் சமூக வலைத்தளம் மற்றும் வர்த்தகசெயற்பாடுகளில்  "சசெக்ஸ் ரோயல்" தலைப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்பது குறித்து சரியாக தெரிவிக்கப்படவில்லை.

எனினும் அவர்கள் இனி அரச குடும்பத்திலிருந்து நிதியைப் பெற மாட்டார்கள், விண்ட்சரில் உள்ள அவர்களின் வீட்டை புதுபித்தமைக்கான செலவை அவர்கள் அரண்மனைக்கு திருப்பிச் செலுத்துவார்கள் என்று அரச வட்டாரம் தெரிவித்துள்ளது.