மனித தவறு காரணமாக ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் உக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பிரான்ஸுக்கு அனுப்புமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். 

கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,  

உக்ரைனுக்கு சொந்தமான போயிங்–-737 ரக பயணிகள் விமானம் கடந்த 8ஆம் திகதி ஈரானிய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அதில் பயணித்த 176 பேரும் கொல்லப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், அந்த விமானத்தில் எமது நாட்டவர்கள் 63 பேர் பயணித்திருந்தனர். அவர்களின் சடலங்களை கனடாவுக்கு அனுப்புமாறு நாங்கள் ஈரானுக்கு வலியுறுத்தியிருந்தோம்.  

மேலும், மிக மோசமான நிலையில் சேதமடையும் கறுப்புப் பெட்டிகளின் தரவுகளைக் கூட கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள வல்லமை பெற்ற சில நாடுகள் காணப்படுகின்றன. அதில் பிரான்ஸும் ஒன்றாகும். 

சேதமடைந்த கறுப்புப் பெட்டிகளை ஆய்வு செய்யும் தொழில்நுட்பமோ அல்லது நிபுணத்துவம் கொண்டவர்களோ ஈரானில் இல்லை. எனவே கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு அவர் வலியுறுத்தியுள்ளதுடன், இந்த தீர்மானத்தை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக் கொள்வார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.