சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 

இச்சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலையில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பில் நீடித்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் என்று புதிய பதவியை உருவாக்கி அதனை  கரு ஜயசூரியவிடம் வழங்குவதற்கான திட்டமொன்றை ரணில் விக்கிரமசிங்க தீட்டியிருந்தார். 

அத்துடன் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்படும் கூட்டணியின் சார்பில் தலைமைத்துவ குழுவொன்றை கரு ஜயசூரிய தலைமையில் அமைப்பதென்ற யோசனையொன்றை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருந்தார். 

இந்த விடயங்களை  கரு ஜயசூரியவை நேரில் சந்தித்து முன்மொழிவதற்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருந்தார். 

எனினும் இறுதியாக சிறிகொத்தாவில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்துள்ளனர். 

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித்தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்க கட்சித்தலைமைப்பொறுப்பில் இருந்தாலும் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கும் பரந்து பட்ட கூட்டணிக்கு சஜித்தே தலைவர் என்றும் தீர்மானித்தாகிவிட்டது.

இதனால் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கரு ஜயசூரியவை மையப்படுத்தி திட்டமிட்டிருந்த விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு நெருக்கடியான நிலைமையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.