(ஆர்.ராம்)

ஐக்கிய  தேசியக் கட்சிக்குள்  உள்ளக முரண்பாடுகள்  அதிகரித்துள்ளன.  ரணில் தரப்பும்  சஜித் தரப்பும்  ஏட்டிக்குப் போட்டியாக  கருத்துக்களை  வெளியிட்டு வரும்  நிலையில்  சபாநாயகர் கருவை  தமது பக்கம்  இழுப்பதற்கு  சஜித் தரப்பு  கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றது. 

 இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை சீர் செய்து அக்கட்சி தலைமையில் வலுவான பரந்து பட்ட கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய திட்டவட்டமாக கூறியுள்ளார். 

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. 

இதன்போதே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும்  ரணில் விக்கிரமசிங்க அப்பதவியிலிருந்து விலகமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் கட்சி ஒற்றுமையோடு முன்நோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க அந்தப் பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

தம்முடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கரு ஜயசூரிய இதற்கான இணக்கத்தை தெரிவித்ததாகவும் தாம் தலைமைத்துவத்தில் தொடர்வதாகவும் தலைமைத்துவ குழுவொன்றை நியமித்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். 

இதனால் வாதப்பிரதிவாதங்கள் வலுத்திருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிறிகொத்தாவில் தலைமைத்துவம் குறித்து இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இதன்போது கட்சியின் செயற்குழு தான், கட்சிக்கு ஒரு புதிய தலைவரை நியமிக்க முடியும், பாராளுமன்றக் குழு அல்ல என்று ரணில் விக்கிரமசிங்க கூறி வெளியேறிய நிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ,சஜித் பிரேமதாஸவை கட்சித்தலைவராக நியமிப்பதற்கு ஆதரவாக 52 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. 

இந்நிலையில் நேற்று முன்தினம் கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்திலும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பரந்து பட்ட கூட்டணியிலேயே களமிறங்குவதென்று பங்காளிக்கட்சித்தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் எடுத்தனர். அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைவாக, சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்த சஜித் பிரேமதாஸவிடத்தில், ஐக்கிய தேசியக் கட்சியானது நீண்ட வரலாற்றைக் கொண்டதொன்று. ஜனநாயக குணாம்சங்களை உள்ளீர்த்து நீண்ட பாரம்பரியத்துடன் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறான பழம்பெரும் கட்சியானது உள்ளக முரண்பாடுகளால் பிளவடைவது பொருத்தமற்றதாகும். மேலும் இந்த நாட்டில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்கான போராட்டமும் தோற்றுப்போகும் அபாயமே ஏற்படும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிளவுகளை களைந்து ஒற்றுமையாக்குவதோடு அதன் தலைமையிலான பரந்து பட்ட கூட்டணியை பலமாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகின்றது. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகரின் நியாயமான கருத்துக்களை சஜித் பிரேமதாஸ செவிமடுத்துள்ளதோடு, பெரும்பான்மையினரின் விருப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்வது தமது நோக்கமில்லை என்றும் பதிலுரைத்ததாகவும் அறிய முடிகின்றது. 

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைவதற்காக தான் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர்  கூறியுள்ளார். 

அத்துடன், தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாக தவறான பிம்பமொன்று கட்சியினுள்ளும், வெளியிலும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே தான் யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் செயற்படவில்லை. 

யாருக்காகவும் பதவிகளை ஏற்கத் துணியப்போவதில்லை. கட்சியினதும், பலமான கூட்டணி உருவாக்கத்துக்காகவுமே அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன். அதற்காக ரணில், சஜித், ஏனைய பங்காளிக்கட்சித்தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப் போகின்றேன் என்றும் அவர் கூறியதாக தெரிவித்தார். 

மேலும், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் அணி நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடத்துவதாக இருந்தபோதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் அம்பாறையில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தமை உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால் அச்சந்திப்பு பிற்போடப்பட்டது.