(நெவில் அன்தனி)

கிம்பர்லி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். 

இதற்கு முன்னர் இந்த இரண்டு நாடுகளும் சந்தித்துக்கொண்ட 7 சந்தர்ப்பங்களிலும் அவுஸ்திரேலியாவே வெற்றிவாகை சூடியிருந்தது.

ஜேடன் சீல்ஸ், மெத்யூ பேர்ட் ஆகியோரின் துல்லயமான பந்துவீச்சுக்களும் நயீம் யங்கின் துணிகரமான அரைச் சதமும் இளம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 46 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

25 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் நயீம் யங், மெத்யூ போர்ட் ஆகிய இருவரும் ஆவர். 

இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளைப் பலப்படுத்தினர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோது ஆட்டம் அவஸ்திரேலியா பக்கம் திசை திரும்புமோ என கருதப்பட்டது.

ஆனால், கடைநிலை ஆட்டக்காரர்களான ஜொஷுவா ஜேம்ஸும் கேர்க் மெக்கென்ஸியும் சாதுரியாமாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய உதவினர். குறிப்பாக மெக்கென்ஸி மிகவும் இலாவகமாக மிட் ஓவ் திசையில் அடித்த சிக்சர் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை உறுதிசெய்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 35.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அரைச் சதம் குவித்த ப்ரேசர் மெக்கேர்க் மற்றும் பெட்றிக் ரோவ் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர போட்டியின் 31ஆவது ஓவரில் 158 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து சற்று பலமான நிலையில் இருந்த அவுஸ்திரேலியா, கடைசி 6 விக்கெட்களை வெறும் 21 ஓட்டங்களுக்கு இழந்து சரிவடைந்தது.

ஓட்ட எண்ணிக்கை சுருக்கம்

19 வயதின் கீழ் அவுஸ்திரேலியா 35.4 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 179 (ப்ரேஸர் மெக்கேர்க் 84, பெட்ரிக் ரோவ் 40, மெக்கென்ஸி ஹார்வி 20, ஜெடன் சீல்ஸ் 49 - 4 விக்., மெத்யூ போர்ட் 24 - 3 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 46 ஓவர்களில் 180 - 7 விக். (நயீம் யங் 61, மெத்யூ போர்ட் 23, லெனார்டோ ஜூலியன் 20, தன்வீர் சங்கா 30 - 4 விக்.) ஆட்டநாயகன்: நியீம் யங்.