யாழில்  கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. 

யாழ்.விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை மதியம் யாழ். நகர்ப் பகுதிகளிலுள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதன் போது ஒரு கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ  தங்கூசி வலையும் மற்றைய கடையிலிருந்து சுமார் 330 கிலோ தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் , அடுத்துக் கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன் , மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர். 

ஒப்படைக்கப்பட்ட கடை உரிமையாளர்களையும் வலைகளையும் நீதி மன்றில் ஆஜர்ப்படுத்த  நடவடிக்கைகளை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.