இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் சகலத்துறை ஆட்டக்காரரான பாபு நட்கார்னி, தனது  86 வயதில் காலமானார். பொவாயில் உள்ள தனது மகள் அனுராதா கரேயின் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். 1950களிலும் 60களிலும் நட்கர்னி 41 பயிற்சி போட்டிகளில் ஆடியுள்ளார். மகாராஷ்ட்ரா நாஷிக்கில் பிறந்த நட்கர்னி இடது கை சுழற்பந்து வீச்சில் புகழ்பெற்றவராவார். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஓவருக்கு சராசரியாக 1.67 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அதிசிறந்த  பந்து வீச்சாளர் நட்கார்னி.

1964ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் 21 மெய்டன் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இதுவரை யாரும் செய்யாத சாதனைக்குச் சொந்தக்காரர் பாபு நட்கர்னி. 32 ஓவர்கள் 27 மெய்டன் 5 ஓட்டங்கள் விக்கெட் இல்லை இது உலக அளவில் சிறந்த  பந்து வீச்சாக இன்று வரை திகழ்கிறது.