கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு சட்ட விரோதமான முறையில் சங்குகள் சிலவற்றை கடத்திய கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கருகில் பெட்டியொன்றுடன் சென்ற நபரை விசாரணை செய்த காவல் கடமையில் நின்ற பொலிசார் பெட்டியில் சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த சங்குகளை கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமாரசிறி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியராச்சி ஆகியோரின் பணிப்பின் பேரில் ஐ.பி.பண்டார தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றன.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த முகம்மது பாறூக் முகம்மது சல்மான் எனவும் இவர் இந்த சங்குகளை வியாபாரத்திற்காக கொண்டு வந்துள்ளார் எனவுர் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.