நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பெப்ரவரி 1- ஆம் திகதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அதில், சம்பவம் நடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறுவன் என்றும், அதனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

மேலும், தனது வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், தனக்கு ஆதரவாக வாதாடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளையும் ஜனவரி 22 ஆம் திகதி தூக்கில் போடும்படி முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், முகேஷ் சிங் என்ற குற்றவாளி, கருணை மனு தாக்கல் செய்ததாலும், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி வழக்கு தொடர்ந்ததாலும் 22 ஆம் திகதி தண்டனையை நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டது. 

அதன்பின்னர், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனையை பெப்ரவரி 1 ஆம் திகதி நிறைவேற்றுவதற்கான புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பவன் குமார் குப்தாவின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும்பட்சத்தில் தண்டனையை நிறைவேற்றுவது மேலும் தள்ளிப்போகலாம்.

குற்றவாளிகளில் வினய், முகேஷ் ஆகிய இருவர் மட்டும், கடைசி சட்ட வாய்ப்பான மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மற்ற இரண்டு குற்றவாளிகளான அக்சய், பவன் ஆகியோர் இதுவரை மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. அவர்கள் இந்த சட்ட வாய்ப்பை பயன்படுத்தும்பட்சத்தில், தண்டனை மேலும் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது.