நடிகர் ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை, நிச்சயம் வரலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் தமிழகம் சென்றிருந்த வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஷ்வரன் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, அரசியல், சினிமா குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், யாழ்ப்பாணத்துக்கு வருமாறும், அங்கு உள்ள தமிழ் மக்களைச் சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும், அவருக்கு நுழைவிசைவு (விசா) வழங்க இலங்கை அரசு மறுப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை இலங்கை அரசு மறுத்தது. மேலும், ரஜினி தரப்பு மறுத்தது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பதிவில், “நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை.

நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.