இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடிவருகின்றது.

மும்பையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தேற்கடித்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று பகல்-இரவு போட்டியாக இடம்பெற்றது.

இந்திய அணியில் இரு மாற்றமாக காயமடைந்த ரிஷாப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு பதிலாக மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி இணைக்கப்பட்டனர். அவுஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.

மீண்டும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

இதன்படி ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

துடுப்பாட்டத்திற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இருவரும் அவசரமின்றி ஏதுவான பந்துகளை விரட்டியடித்தனர்.

ஓட்ட எண்ணிக்கை சீரான வேகத்தில் நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் சேர்த்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா பிரித்தார்.

அவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (42 ஓட்டங்கள் , 44 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து அணித் தலைவர் விராட் கோலி, ஷிகர் தவானுடன் கைகோர்த்தார்.

கோலி வந்ததும் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் சுழலில் தொடர்ந்து 2 பவுண்டரி விளாசிய தவான், அவரது இன்னொரு ஓவரில் சிக்சர் பறக்க விட்டார்.

18 ஆவது சதத்தை நெருங்கிய தவான் துரதிர்ஷ்டவசமாக 96 ஓட்டங்களில் (90 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேன் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் (7 ஓட்டங்கள்) ஜம்பாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். 4 ஆவது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் களம் புகுந்தார்.

மறுமுனையில் 56 ஆவது அரைசதத்தை கடந்த கோலி 78 ஓட்டங்களில் (76 பந்து, 6 பவுண்டரி) ஜம்பாவின் பந்து வீச்சை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார்.

ஜம்பாவின் சுழல் வலையில் கோலி சிக்குவது இது 5 ஆவது நிகழ்வாகும். கடைசி கட்டத்தில் ராகுல் அதிரடியில் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மிட்செல் ஸ்டார்க், கம்மின்சின் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களை தெறிக்க விட்ட லோகேஷ் ராகுல், சவாலான ஓட்டஎண்ணிக்கையை எட்ட வழிவகுத்ததுடன் 80 ஓட்டங்களில் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்களை குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் 91 ஓட்டங்களை திரட்டினர்.

பின்னர் 341 ஓட்டங்கள் இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி விளையாடியது. முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ டேவிட் வார்னர் (15 ஓட்டங்கள்) இந்த முறை நிலைக்கவில்லை.

முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் அடித்த பந்து ‘கவர்’ திசையில் நின்ற மனிஷ் பாண்டே துள்ளிகுதித்து ஒற்றைக்கையால் பிடியெடுத்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து அணித் தலைவர் ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சைனியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய சுமித், துரிதமான ஓட்டங்களை சேகரிப்பில் ஈடுபட்டார். ஓட்ட எண்ணிக்கை 82 எட்டிய போது, ஆரோன் பிஞ்ச் (33 ஓட்டங்கள்) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார்.

சுமித்-லபுஸ்சேன் ஜோடியை  உடைக்க இந்திய அணித் தலைவர் விராட் கோலி அடிக்கடி வியூகங்களை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஓட்டத்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர்கள்  நெருக்கடிக்குள்ளானார்கள். லபுஸ்சேன் தனது பங்குக்கு 46 ஓட்டங்களை (47 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார்.

இன்னொரு பக்கம் இந்திய பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஸ்டீவன் சுமித் 98 ஓட்டங்களில் (102 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

பந்து அவரது துடுப்பில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. இதற்கிடையே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் (18 ஓட்டங்கள்) குல்தீப் யாதவின் சுழலில் வீழ்ந்தார்.

சுமித் வெளியேறியதும் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. 49.1 ஓவர்களில் அவுஸ்திரேலியா 304 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் நாளை (19.01.2020) இடம்பெறவுள்ளது.