தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 13ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கிம்பர்லி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா எதிரணி பந்துவீச்சுகளை முறையாக எதிர்கொள்ள முடியாமல் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சுழல் பந்துவீச்சாளர் ஷபிக்குல்லாஹ் காவாரி மிகத் துல்லியமாக பந்துவீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

தென் ஆபிரிக்கத் துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை எட்டவில்லை.

130 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப விக்கெட்டை மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தபோது இழந்தது. ஆனால் அதன் பின்னர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்ராஹிம் ஸத்ரான், இம்ரான் மிர் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை சுலபப்படுத்தினர்.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக ஷபிக்குல்லாஹ் கடாபி தெரிவானார்.

போட்டியின் பின்னர் கருத்துவெளியிட்ட கடாபி, 'நான் முதன் முதலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது ஷேன் வோர்ன் பந்துவீசும் முறைமையை வீடியோக்களில் பார்வையிட்டேன். அப்போது அவரைப் போல் பந்துவீசவேண்டும் எனத் தீர்மானித்தேன்.

'உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் ஆறு விக்கெட்கள் வீழ்த்துவதென்பது பெரிய விடயம். அந்தக் கனவு நனவானமை பெரு மகிழ்ச்சி தருகின்றது. இந்த பந்துவிச்சு பெறுமதியானது அடுத்து வரும் போட்டிகளில் திறமையாக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்துள்ளது' என்றார்.

எண்ணிக்கை சுருக்கம்

19 வயதின் கீழ் தென் ஆபிரிக்கா 29.1 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 129 (பி. பார்சன்ஸ் 40, 8ஆம் இலக்க வீரர் ஜீ. கோட்ஸீ 38, எல். போவோர்ட் 25, ஷபிக்குல்லாஹ் கடாபி 9.1-2-15-6, பஸால் ஹக் 43-2 விக்., நூர் அஹ்மத் 44-2 விக்.)

19 வயதின் கீழ் ஆப்கானிஸ்தான் 25 ஓவர்களில் 130 - 3 விக். (இம்ரான் மிர் 57, இப்ராஹிம் ஸத்ரான் 52, ஏ. குளோட் 20 - 2 விக்.)

இன்றைய போட்டி: 19 வயதின்கீழ் பங்களாதேஷ் எதிர் 19 வயதின் கீழ் ஸிம்பாப்வே