கூட்டு ஒப்பந்தமொன்று நடைமுறையில் இருக்கின்ற அதேவேளை தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்தச்சம்பளத்தை 17 சதவீதத்தால் உயர்த்தி எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபாவாக வழங்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவின் மூலமாக 'தேநீர் கோப்பைக்குள் ஒரு புதிய புயலை" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தோற்றுவித்திருக்கிறார். 

ஏற்கனவே நெருக்கடியில் இருப்பதாகக்கூறும் பெருந்தோட்டக் கம்பனிகள் ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் சம்பள உயர்வை வழங்குவதற்கான வல்லமை தங்களுக்கு இல்லை என்று தெரிவித்திருக்கின்றன.

பெருந்தோட்டக் கம்பனிகளும், இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிலைவரம் குறித்து ஆராய அவசர கூட்டமொன்றை நடத்தின. ஏற்கனவே பெருந்தோட்டத்துறை நெருக்கடிக்குள் இருக்கும் நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 'அதிர்ச்சி தரும் ஒன்று" என்று பெருந்தோட்டக் கம்பனிகளின் உயரதிகாரியொருவர் கூறினார்.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் ஏல விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 620 ரூபாவாக இருந்த தேயிலையின் விலை, இப்போது 550 ரூபாவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. உற்பத்திச் செலவும் உயர்வானதாக இருக்கிறது. அதேவேளை இறப்பரின் விலையும் கூட மிகவும் குறைவானதாகவே இருந்துவருகிறது.

'பெருந்தோட்டத் தொழிற்துறை தொடர்ந்து நட்டத்தில் இயங்குகின்ற போது சம்பள உயர்வை வழங்கக்கூடிய நிதி வல்லமை எங்களிடமில்லை. சிறு தேயிலைப் பயிர்ச்செய்கையாளர்களும், தனியார் தொழிற்சாலைகளும் கூட நெருக்கடிக்குள் இருக்கின்றன" என்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்கான பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து கோத்தபாய ராஜபக்ஷ தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது முதலில் உறுதியளித்தார். வரி விலக்கு, பெருந்தோட்டத்துறைக்கான உரமானிய அதிகரிப்பு போன்ற பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் கடந்த செவ்வாய்கிழமை கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, இந்தச் சலுகைககள் மூலமான பலன்கள் தொழிலாளர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

'கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தமொன்று நடைமுறையில் இருக்கின்ற வேளையில் எந்த விதமான கலந்தாலோசனையுமின்றி சம்பள உயர்வும், அது நடைமுறைக்கு வரவேண்டிய திகதியும் அறிவிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய சம்பள உயர்வொன்றை நடைமுறைப்படுத்துவது

கூட்டு ஒப்பந்தங்களைக் கொண்ட ஏனைய துறைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும்" என்று பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மற்றுமொரு நிபுணர் எச்சரிக்கை செய்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு 145 ரூபா சம்பள உயர்வை வழங்கினால், சம்பளத்திற்கான செலவு (சேவைக்காலத்தொகை நீங்கலாக) 600 கோடி ரூபாவாக உயரும். சம்பள நிர்ணய சபைகளின் கீழான ஏனைய சில துறைகளுடன் ஒப்பிடும்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தோட்டத்தொழிற்துறையினர் எதிர்வரும் திங்கட்கிழமை நெருக்கடிநிலை குறித்து அரசாங்கத்திற்கு விளக்கமளிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறது. ஜனாதிகதியின் அறிவிப்பு குறித்து இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நேற்றைய தினம் அதன் அபிப்பிராயத்தை உத்தியோகபூர்வமாக அறிக்கையாக வெளியிடவிருந்தது.

'தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்குப் பெருந்தோட்டத்துறையினரும், திறைசேரி அதிகாரிகளும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தரவை அடுத்தவாரம் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கிறது" என்று பெருந்தோட்டத் தொழிற்துறை, ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அடிப்படைச் சம்பளத்தில் 145 ரூபா உயர்வு குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த அதிகரிப்பை வழங்குவதன் மூலமாக ஏற்படக்கூடிய நிதிச்சுமையை அரசாங்கத்தினால் ஒரு குறுகிய காலகட்டத்திற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பத்திரன கூறினார். அவ்வாறு அரசாங்கம் பொறுப்பேற்பதாக இருந்தால் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளும், தோட்டத்தொழிலாளர்களும் தங்களது உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும்.

சேமிப்புக்கள் மீதான வரிக்குறைப்பு மற்றும் உரமானியம் மீதான நிவாரணம் ஆகியவை நடைமுறைக்கு வரும்போது பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் நல்லதொரு நிலைக்கு வரக்கூடியதாக இருக்குமென்று தான் அபிப்பிராயப்படுவதாகவும் அமைச்சர் பத்திரன கூறினார்.

'பெறுமதிசேர் வரி (வற்) குறைப்பு, பொருளாதார சேவைக்கட்டணக் குறைப்பு மற்றும் கடன்கள் அறவீடு இடைநிறுத்தம் ஆகியவை உட்பட நிதி நிவாரணங்களை நாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த உதவிகள் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு இணங்கிச் செயற்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதுடன், வரிக்குறைப்புக்களின் பயன்களைத் தோட்டத்தொழிலாளர்களும் அடையக்கூடியதாக நாளாந்தச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்" என்று கூறிய அமைச்சர் பத்திரன, பெரும்பான்மையான தோட்டக்கம்பனிகள் இலாபத்திலேயே இயங்குகின்றன. 

ஆனால் அவற்றின் ஐந்தொகைகளில் அவை அடிக்கடி பிரதிபலிப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், தோட்டத்துறைத் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழிலாளர்கள் நாளாந்தச் சம்பளமாக 855 ரூபாவையே பெறுகிறார்கள். நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளம் 700 ரூபா, மேலதிகமாகப் பறிக்கப்படுகின்ற ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கான 40 ரூபா கொடுப்பனவு, நாளொன்றுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான கொடுப்பனவு 105 ரூபா ஆகியவை இதிலடங்குகின்றது.

2016 கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 805 ரூபாவைச் சம்பளமாகப் பெற்றார்கள். இதில் அடிப்படைச் சம்பளம் 500, நிலையான ஊக்குவிப்புக் கொடுப்பனவு 30 ரூபா, தின வருகைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு 60 ரூபா, உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவு 140 ரூபா, தினமொன்றுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் 75 ரூபா ஆகியவையும் அதிலடங்குகிறது.

2019 முற்பகுதியில் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கக்கோரித் தோட்டத்தொழிலாளர்களும், ஏனைய குழுக்களும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.