(நெவில் அன்தனி)

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்றுவரும் பங்கபந்து தங்கக் கிண்ண சர்வதேச கால்பந்தாட்டத்தின் இன்றைய ஏ குழு போட்டியில் பலஸ்தீனத்துக்கு கடும் சவால் விடுத்து விளையாடிய இலங்கை, உபாதையீடு (இஞ்சரி டைம்) நேரத்தில் 2 கோல்களைக் கொடுத்து தோல்வியைத் தழுவியது.

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி போட்டியின் முதலாவது பகுதியின் 42 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை கோலாக்கத் தவறியது. 

20 யார் தூரத்திலிருந்து வசீம் ராஸிக் உதைத்த பந்து பலஸ்தீன வீரரின் தலையில் பட்டு மேல் நோக்கி சென்று கோலின் குறுக்குக் கம்பத்தில் பட்டு கீழ் நோக்கிவந்தபோது அதனை பின்கள வீரர் ஒருவர் திசைதிருப்ப இலங்கையின் கோல் போடும் வாய்ப்பு அற்றுப்போனது.

இடைவேளையின் பின்னர் பலஸ்தீன வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடி கோல் முயற்சித்தனர். ஆனால், இலங்கை கோல் காப்பாளர் றுவன் அருணசிறி அம் முயற்சிகளை அலாதியாக தடுத்து நிறுத்தி பெரும் பாராட்டைப் பெற்றார்.

மறுபுறத்தில் இலங்கை அணியும் கோல் போடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டது. ஆனால், முன்கள வீரர்களின் இலக்குகள் தவறிப்போயின.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் நுழைந்த பலஸ்தீன் வீரர் கே. சலீம் ஆட்டத்தின் நிலையை தமது பக்கம் திருப்ப கடுமையாக முடியற்சித்தார். எனினும் இலங்கையின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் சாதுரியமாக செயற்பட்டு பலஸ்தீன அணியை பிரமிக்கச் செய்தனர்.

போட்டி 90 ஆவது நிமிடத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து உபாதையீடு நேரத்துக்குள் ஆட்டம் சென்றபோது (93ஆவது நிமிடம்) எம். டார்விஷ் இடதுபுறத்தில் இருந்து உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி வலப்புறமாக வேகமாக நகர்ந்த அணித் தலைவர் எம். அபுவார்டா தனது தலையால் முட்டி கோல்போட்டபோது இலங்கை அணி அதிர்ந்துபோனது.

இரண்டு நிமிடங்கள் கழித்து இலங்கை அணிக்கு கோர்ணர் கிக் கிடைத்தபோது சகல வீரர்களும் கோல்நிலையை சமப்படுத்தும் நோக்கில் பலஸ்தீன கோல் எல்லையை சூழ்ந்து நின்றனர். ஆனால் பஸாலின் கோர்ணர் கிக்கை தம்வசப்படுத்திக்கொண்ட பலஸ்தீன வீரர்கள் பந்தை வேகமாக நதர்த்தி முன்னோக்கிச் செல்ல இலங்கையின் ஒரே ஒரு வீரரும் கோல்காப்பாளருமே தமது எல்லையில் இருந்தனர். 

ஏனைய இலங்கை வீரர்கள் தங்களது நிலைகளுக்கு திரும்புவதற்கு முன்பதாக பந்துடன் சென்ற டி இராக்கி பந்தை இடதுபுறமாகப் பரிமாற அதை நோக்கி இலங்கை கோல்காப்பாளர் வேமாக முன்னோக்கி ஓடினார். ஆனால் அவரை முந்திக்கொண்ட பலஸ்தீன வீரர் கே. சலீம் மிக இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி தனது அணியின் இரண்டாவது கோலைப் போட்டார்.

இதன் மூலம் குழு ஏயில் தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய பலஸ்தீனம் அரை இறுதியில் விளையாடத் தகுதிபெற்றது.

இலங்கையும் பங்களாதேஷும் தத்தமது முதலாவது போட்டிகளில் பலஸ்தீனத்திடம் 2 - 0 என்ற ஒரே கோல் எண்ணிக்கையில் தோல்வி அடைந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீரமானமிக்க போட்டியாக அமையவுள்ளது.