(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது.  கடந்த அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான  காரணம்.  மக்களை  நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் அரசாங்கம்  செயற்படாது என காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வரும் போது அரசாங்கம் வழங்கிய  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்  முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும்  எதிர்க்கட்சியினர் தற்போது அரசாங்கத்தின் மீது  குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தின்  முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையே  தேசிய பொருளாதாரம்  வீழ்ச்சியடைவதற்கு   பிரதான காரணம் ஆகவே அரசாங்கத்தை  விமர்சிக்கும்  தகுதி   எதிர் தரப்பினருக்கு கிடையாது.

பிணைமுறி கொடுக்கல்  வாங்கல் மோசடி,   ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் மீள் பரிசீலனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது. வெகுவிரையில்  குற்றவாளிகள் சட்டத்தின் முன்  நிறுத்தப்பட்டு  தண்டிக்கப்படுவார்கள் என்றார்.