(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டால் வெற்றி பெற முடியாது.

எனவே ஒப்பந்தத்தில் கூறப்பட்டதைப் போன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகளும் இணைந்து ' ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தான (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு) ' என்ற கூட்டணியில் போட்டியிடும் என்று சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 ' ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தான ' கூட்டணி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எனவே இது குறித்து யாரும் கலவரமடையத் தேவையில்லை.

கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்தாலோசித்து ஆரோக்கியமான தீர்மானத்தை எடுப்பர். எனினும் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் இம் மாதம் ஆரம்பித்துள்ளது என்றார்.