(இராஜதுரை ஹஷான்)

நிபந்தனைகளின் அடிப்படையிலே  அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த பிரேரணை வெற்றி பெறுவதற்கு  ஆதரவு  வழங்கினோம்.  20 ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்ற தேர்தல் முறைமை திருத்தியமைக்கப்படும் என்று  மைத்திரி- ரணில் ஆகியோர்  வழங்கிய  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன்  காரணமாகவே  இன்று    பலவீனமான  பாராளுமன்றம் நடைமுறையில்  உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முத்துறைகள் மற்றும் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு இடையில் அதிகார போட்டித்தன்மையினை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தோற்றுவித்துள்ளது.  

நிலையான  பாராளுமன்றத்தை கொண்டு சிறந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின்  பல்வேறு   தரப்பினரது விமர்சனங்களை பெற்றுள்ள இத்திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியாக உள்ளார்.

அதிகார ரீதியில் முக்கிய தரப்பினருக்கு இடையில் போட்டித்தன்மையினை ஏற்படுத்தியுள்ள  அரசியலமைப்பின் 19 ஆவது  திருத்த  பிரேரணை பாராளுமன்றில் வெற்றி பெறுவதற்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள் என்று எதிர் தரப்பினர் தற்போது கேள்வி  எழுப்புகின்றார்கள்.   நிபந்தனைகளின் அடிப்படையிலே  இத்திருத்த பிரேரணைக்கு  ஆதரவு வழங்கினோம்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்பட்டது. 19 ஆவது திருத்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட  ஏற்பாடுக்ள பல  பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.  

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை  கொண்டு வந்து   அதனூடாக  பாராளுமன்ற  தேர்தல் முறைமையினை திருத்தியமைக்க முடியும் என்றும், அதற்கு தான் பொறுப்பு என்றும் முன்னாள் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன   வழங்கிய  வாக்குறுதியின்  காரணாமாகவே  2015ம் ஆண்டு   பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்த பிரேரணை வெற்றிப் பெற  முழுமையான ஆதரவு  வழங்கினோம் எனத் தெரிவித்தார்.