(நெவில் அன்தனி)

அடுத்த தலைமுறைக்கான அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவல்ல ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13 ஆவது அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் இன்று ஆரம்பமாகின்றது.

நான்கு குழுக்களில் 16 நாடுகள் பங்குபற்றும் இந்த உலகக் கிண்ண அத்தியாயம் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் கிம்பர்லியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியுடன் தொடங்குகின்றது.

13ஆவது அத்தியாயத்தில் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி பெப்ரவரி 9ஆம் திகதி பொச்செவ்ஸ்ட்ரூம்  அரங்கில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1988இல் இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் தடவையாக நடத்தப்பட்டது. அங்குரார்ப்பண போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானது.

பத்து வருடங்கள் கழித்து 1998 இலிருந்து 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகின்றது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 12 அத்தியாயங்களில் நடப்பு சம்பியன் இந்தியா 4 தடவைகளும் அவுஸ்திரேலியா 3 தடவைகளும் சம்பியனாகியுள்ளன. பாகிஸ்தான் மாத்திரமே இரண்டு தொடர்ச்சியான (2004, 2006) தடவைகள் சம்பியனானது. இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன தலா ஒரு தடவை சம்பியனாகின.

இம்முறை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் விளையாடும் 11 நாடுகளும் ஐ.சி.சி.யில் இணை அங்கத்துவம் பெற்ற 5 நாடுகளுமாக 16 நாடுகள் விளையாடுகின்றன.

குழு ஏ: ஆப்கானிஸ்தான், கனடா, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம்

குழு பி: அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, மேற்கிந்தியத் தீவுகள்

குழு சி: பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே

குழு டி: இந்தியா, ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை

நாடுகள் குழுப்படுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் பெரும்பாலும் முதலிரண்டு இடங்களைப் பெற்று பிரதான கிண்ணத்துக்கான கால் இறுதிவரை முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வெர்ரு குழுவிலும் கடைசி இரண்டு இடங்களைப் பெறும் நாடுகள் 9ஆம் இடத்திலிருந்து 16ஆம் இடம்வரையான நிரல்படுத்தலுக்கான சுற்றில் விளையாட தகுதிபெறும்.

குழு டியில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்ப லீக் போட்டியில் இந்தியாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து நியூஸிலாந்தை எதிர்வரும் 22ஆம் திகதியும் ஜப்பானை 26ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.

கொழும்பில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டம்வரை முன்னேறிய இலங்கை, இந்தியாவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தது.

இம்முறை எப்படியாவது இறுதி ஆட்டம் வரை முன்னேற இலங்கை முயற்சிக்கும் என அணித் தலைவர் நிப்புன் தனஞ்சய தெரிவித்துள்ளார்.

முன்னைய அத்தியாயங்கள் நடைபெற்ற இடங்கள், சம்பியன்கள் மற்றும் இரண்டாம் இடங்கள்

1988 அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா பாகிஸ்தான்

1998 தென் ஆபிரிக்கா இங்கிலாந்து நியூஸிலாந்து

2000 இலங்கை இந்தியா இலங்கை

2002 நியூஸிலாந்து அவுஸ்திரேலியா தென் ஆபிரிக்கா

2004 பங்களாதேஷ் பாகிஸ்தான் மே. தீவுகள்

2006 இலங்கை பாகிஸ்தான் இந்தியா

2008 மலேசியா இந்தியா தென் ஆபிரிக்கா

2010 நியூஸிலாந்து அவுஸ்திரேலியா பாகிஸ்தான்

2012 அவுஸ்திரேலியா இந்தியா அவுஸ்திரேலியா

2014 ஐ.அ.இராச்சியம் தென் ஆபிரிக்கா பாகிஸ்தான்

2016 பங்களாதேஷ் மே. தீவுகள் இந்தியா

2018 நியூஸிலாந்து இந்தியா அவுஸ்திரேலியா

2020 தென் ஆபிரிக்கா ? ?