இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (17)ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் பாழடைந்துள்ள ஓட்டு தொழிற்சாலையை  பார்வையிட்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டோடு  இயங்காது போன இந்த ஓட்டு தொழிற்சாலை இடை நடுவில் இயங்காது போயுள்ளது விரைவில் இந்த அரசின் காலத்தில் இந்த தொழிற்சாலையை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் .

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்த தொழிற்சாலை இயங்க வைக்கப்படும் அதற்காக இந்த துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்துள்ளோம் .

இந்த பிரதேசத்தின் அனைத்து மக்களிடமும் உங்களுடைய ஒத்துழைப்பை இதற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் .இந்த பிரதேச மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளோம் .இந்த தொழிற்சாலையின் முழுமையான பிரதிபலன் இந்த பிரதேசத்துக்கே கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் .

ஜனாதிபதி கோத்தபாயவின் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் ,விவசாயத் துறைகளை மேம்படுத்துவதையே கருப்பொருளாக கொண்டுள்ளோம் முழுமையாக தடைபட்டுள்ள வடக்குக்கான இந்த துறைகளும் மேம்படுத்தப்படும் .

இந்த பிரதேச மக்களிடம் காட்ட பட்ட படம்தான் கோத்தாபய  ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் அடுத்த நாளே இராணுவ ஆட்சி உருவாக்கப்படும் என ஆனால் இன்று நடைபெறுவதை வைத்து பார்க்கும் போது அவை அனைத்தும் பொய் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

அரசாங்கத்துக்கும் இப் பிரதேச மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி சிலர் அதன்மூலம் இலாபம் அடைய பார்க்கின்றார்கள் . அந்த பிரிவினைவாத சக்திகளுடன் ஒன்றிணையாமல் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.