இந்தியாவில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய குற்றவாளியான டொக்டர்  பொம்ப் என அழைக்கப்படும் ஜலீஸ் அன்சாரி  பரோலில் விடுதலையான வேளை காணாமல்போயுள்ளமை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பாய் தொடர் குண்டுவெடிப்பு உட்பட பல குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே காணாமல்போயுள்ளார்.

 எம்பிபிஎஸ் மருத்துவரான அன்சாரி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் குண்டுகளை  வெடிக்க வைத்தமைக்கா 1994 இல் கைது செய்யப்பட்டவர் இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இவர் மீது வேறு பல குண்டுதாக்குதல் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்நிலையில் 21 நாள் பரோலில் விடுதலையாகியிருந்த இவர் பரோல் காலம் முடிவடைவதற்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

வியாழக்கிழமை காலை தொழுகைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என  அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தாங்கள் காவல்துறையின் அலுவலகத்திற்கு சென்று அவரை தேடியதாகவும் குடும்பத்தினர்.

அன்சாரியின் குடும்பத்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அன்சாரி பரோலில் விடுதலையாவதற்கு பிணைநின்ற நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குண்டு தயாரிக்கும் நிபுணத்துவத்திற்காக டொக்டர் பொம்ப் என அழைக்கப்பட்ட அன்சாரிக்கு டிசம்பரில் நீதிமன்றம் 21 நாள் பிணையை வழங்கியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.