யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கால்வாய்கள் புனரமைக்கப்படாமையினால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட யாழ்.நகரப்பகுதிகளை அண்டிய மக்கள் கூடும் இடங்களை அண்மித்த இடங்களிலுள்ள கால்வாய்களே இத்தகைய துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.பேதனாவைத்தியசாலையை அண்டியுள்ள கால்வாய் மற்றும் யாழ்.புகையிரத நிலையப் பகுதியை அண்மித்திருக்கும் கால்வாயிலுள்ள நீர் வடிந்தோடாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த பகுதியிலுள்ள வட்டார உறுப்பினர்களிடம் அறிவித்திருந்தபோதும் அதனை அவர்கள் கவனிக்காதுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீடுகள் மற்றும் வளவுகளில் நீர் தேங்கிநின்றால் டெங்கு நுளம்புகள் விருத்தியடைகின்றன என சட்ட நடவடிக்கை எடுக்கும் மாநகரசபை பொது இடங்களில் நீர் தேங்கியுள்ளமை தொடர்பில் எத்தகைய அவதானிப்புக்களும் இன்றி செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்.நகரத்தை பொறுத்தவரையில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமன்றி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாகவுள்ளமையினால் குறித்த பகுதிகளை துப்புரவு செய்யவும் அதனை நிரந்தரப் புனரமைப்பு செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.