ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரின் தளத்தின்  மீது மேற்கொண்ட தாக்குதலில்  11 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் தாக்குதலில் படையினர் எவரும்காயமடையவில்லை என  அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 8 ம் திகதி அல்அசாத் விமானதளத்தில் இடம்பெற்ற ஈரானின் தாக்குதலில்  படையினர் எவரும் கொல்லப்படாத அதேவேளை பல படையினருக்கு குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட மூளையதிர்ச்சி அறிகுறிகளிற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது  என ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை காரணமாக படையினரை அல் அசாத் தளத்திலிருந்து ஜேர்மனியில் உள்ள மருத்துவநிலையமொன்றிற்கு மேலதிக ஆய்வுகளிற்காக அனுப்பிவைத்துள்ளதாகவும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளதுடன் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் ஈராக்கிற்கு வருவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க படையதிகாரியொருவர் ஈரானின் ஏவுகணை தாக்குதலில்11 படையினர் காயமடைந்துள்ளனர் என சிஎன்என் செய்தியாளருக்குதெரிவித்துள்ளார்.

படையினர் எவரும் காயமடையவில்லை என முதலில் ஏன் பென்டகன் அறிவித்தது என்ற கேள்வி;க்கு காயங்களிற்கான அறிகுறிகள் அடுத்த சில நாட்களிலேயே தென்படத்தொடங்கின- அவர்களிற்கு முன்னெச்சரிக்கையாக சிகிச்சை அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.