(எம்.எப்.எம்.பஸீர்)

 குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத் தடை  செய்ததாக  குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் மேலும் இரு வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக ஷாபி ஷிஹாப்தீன் தம்புள்ளை மற்றும் கலேவலை வைத்தியசாலைகளில் கடமையாற்றிய போது தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்யப்பட்டதாக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் சிலவற்றை மையப்படுத்தி இவ்விரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதாக சி.ஐ.டியினர் நேற்று குருணாகல் நீதிவானுக்கு அறிவித்தனர்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத்ஹேவா வசம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் போது இந்த விவகாரத்தின் மீள் விசாரணைகள் அல்லது புதிய விசாரணைகளுக்கு பொறுப்பாகவுள்ள சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜித பெரேரா மேற்படி விடயத்தை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

நேற்று விசாரணைகள் ஆரம்பமான போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டாரவின் கீழ் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஷ் நூர்தீன் , பசன் வீரசிங்க , சைனாஸ் அஹமட் உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.

விசாரணையாளர்கள் சார்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித பெரேராவின் தலைமையில் சமூக கொள்ளை விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசேகர , பொலிஸ் பரிசோதகர் மொஹான் , கான்ஸ்டபில் சில்வா உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜராகினர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் , சிரேஷ்ட சட்டத்தரணி சானக உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜராகியது. இந்நிலையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித பெரேரா புதிய விசாரணைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

' கனம் நீதிவான் அவர்களே , கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு அமைய இந்த விவகாரத்தில் புதிதாக ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இவ்விசாரணைகளை நானே மேற்பார்வை செய்கின்றேன். இந்நிலையில் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட அல்லது இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் இருந்து இந்த விசாரணைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

அதன்படி முதலில் குருணாகல் வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தாதியர் என 76 பேரிடம் இதுவரை வாக்கு மூலம் பதிவு செய்துள்ளோம். அத்துடன் இதற்கு முன்னர் விசாரணை அதிகாரிகளின் அவதானம் செலுத்தப்படாத பிரசவத்துக்கு முன்னரான, பின்னரான ஆய்வு பிரிவில் சேவையாற்றுவோரிடமும் வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை விட 6 புதிய முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்துள்ளன.

குருணாகல் வைத்தியசாலையின் 210/103 எனும் இலக்கத்தின் கீழிருந்த டீ.எச்.டீ அட்டையை மாற்றி நவசியாம் ப்ரியா என்பவரது குழந்தையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அந்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு மேலதிக ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதே நேரம் இந்த விவகாரத்தோடு இணைந்ததாக தம்புள்ளை நீதிவான் நீதிமன்றுக்கு 82/2020 , 83/2020 ஆகிய இலக்கங்களின் கீழ் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தம்புள்ளை , கலேவலை வைத்தியசாலைகளில் சந்தேகநபர் சேவையாற்றிய போது சட்ட விரோத கருத்தடைகள் அங்கும் இடம்பெற்றனவா என்பதை உறுதி செய்ய கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் ஷாபி ஷிஹாப்தீனை முதலில் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் குற்றயவியல் பொறுப்பதிகாரியே கைது செய்துள்ளார். அப்போது அவரால் வைத்தியர் ஷாபியின் வீட்டில் இருந்து சீ.சீ.ரி.வி காணொளிகள் பதிவாகும் டீ.வி.ஆர் உபகரணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் அது மேலதிக விசாரணைகளுக்காக சீ.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்  முன்னைய விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபருக்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டீ.வி.ஆர் உபகரணம் எமது புதிய விசாரணைகளுக்கு அவசியம் என்பதால் அதனை எம்மிடம் மீள ஒப்படைக்க சந்தேகநபருக்கு உத்திரவிட வேண்டும். ( குறித்த கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் அந்த டீ.வி.ஆர் உபகரணத்தை சீ.ஐ.டியில் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார். )

கடந்த மூன்றாம் திகதி சீ.ஐ.டி பணிப்பாளர் உள்ளிட்ட விஷேட குழுவினர் கொழும்பு பல்கலைகழகத்தின் வைத்திய பீட பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடினோம். இதன் போது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 869 தாய்மாரையும் தனித்தனியாக பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சட்ட விரோத கருத்தடை அல்லது மலட்டுத் தன்மைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய முடியும் என பீடாதிபதியால் கூறப்பட்டது. எனவே பொருத்தமான பரிசோதனை ஒன்றுக்கு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மாரை உட்படுத்தி அது தொடர்பில் அறிக்கை சமர்பிக்க கொழும்பு பல்கலைகழகத்தின் வைத்திய பீட பீடாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோருகிறோம். ( குறித்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ) ' என உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித பெரேரா மன்றில் கூறினார்.

இதனையடுத்து ஷாபியின் சட்டத்தரணி நவரத்ன பண்டார தனது வாதங்களை முன்வைத்தார். ' சீ.ஐ.டி புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறது. அப்படியானால் இதற்கு முன்னர் செய்த விசாரணைகளில் தவறுகள் பிழைகள் உள்ளதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு. சந்தேகநபரை கைது செய்யத பின்னரே சாட்சிகளைத் திரட்டுகின்றனர். அப்போதும் இப்போதும் அதுவே நடக்கிறது. சீ.ஐ.டி கோரும் டீ.வி.ஆரை வழங்க எந்த ஆட்சேபனைகளும் இல்லை.

சந்தேகநபரின் பிணை நிபந்தனைகளில் ஒன்றான ஒவ்வொரு மாதமும் சீ.ஐ.டி தலைமையகத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையில் சிறு மாற்றத்தைக் கோருகின்றோம். அதாவது சந்தேகநபரின் மனைவி பிள்ளைகள் அனைவரும் தற்போது கல்முனையில் வசிக்கின்றனர். சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற பிள்ளைகள் தற்போது தமிழ் மொழிமூலம் கற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு சீ.ஐ.டி. தலைமையகத்தில் கையெழுத்திடுவதற்கு பதிலாக சீ.ஐ.டி.யின் மட்டக்களப்பு கிளை காரியாலயத்தில் கையெழுத்திடும் வகையில் அந்த நிபந்தனையை திருத்தி தருமாறு கோருகின்றோம். ' என்றார்.

எனினும் அந்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் , சானக ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். இந்த விசாரணைகள் தற்போதே சரியான பாதைக்கு வந்துள்ளதாகவும் இதற்கு முன்னர் சீ.ஐ.டீ விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு பல்வேறு முரண்பட்ட தகவல்களையே முன்வைத்துள்ளனர். சரியாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அது எவ்வாறு என இது வரை புரியவில்லை. என அவர்கள் மன்றுக்கு தெரிவித்தனர்.

இதன் போது சீ.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித பெரேரா முன்னைய விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு தவறான அல்லது மறைக்கப்பட்ட தகவல்களை முன்வைத்திருப்பின் அது தொடர்பில் தனது ஆழ்ந்த கவலைகளை மன்றில் தெரிவிப்பதாக கூறினார்.

இதனையடுத்து வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி நவரத்ன பண்டார , வைத்தியர் ஷாபி பயங்கரவாத தடை சட்டத்தில் இருந்து உரிய முறையிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் உளவுத் துறைகள் , பொலிஸார் , முப்படைகளிடமிருந்து அறிக்கை பெற்ற பின்னரேயே அவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை வழக்கு பதிவுகளில் மிகத் தெளிவாக உள்ளததாகவும் . மீண்டும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாகப் பேசி சந்தேகநபரின் பிணையை இரத்து செய்வதே பாதிக்கப்பட்டோரின் சட்டத்தரணிகளின் நோக்கமாகும். என்றார்.

இந்நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் இது தொடர்பிலான விசாரணைகளுக்கு சீ.ஐ.டியின் கோரிக்கைக்கு அமைய இரு மாத கால அவகாசம் வழங்கி வழக்கை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.