(எம்.மனோசித்ரா)

குருணாகல் முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக பாதையில் இடைப் பகுதியின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 31 ஆம் திகதிக்குள் நிறைவடையச் செய்யா விட்டால் ஒப்பந்தகாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.மத்திய அதிவேக பாதைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :

குருணாகல் முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக பாதையில் இடைநடுவிலான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனால்  அப்பகுதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரையில் இப்பாதையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இப்பகுதியில் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகளை துரித கதியில் நிறைவுச்செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அரசாங்கம் மற்றும் அமைச்சர்களின் பிரதான தேவை அதிவேக பாதைகளின் அபிவிருத்தியல்ல. மாறாக அதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொள்ளவதாகவே இருந்தது.

இப்பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.  அவர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ளோம்.

அதாவது மீரிகம முதல் குருணாகலில் முத்தெட்டுவ வரையிலான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவுச் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

மீரிகம முதல் கடவத்தை வரையிலான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்காது நான்கரை ஆண்டுகளாக கடந்த அரசாங்கம் காலம் தாழ்த்தியுள்ளது.

இதனால் மீரிகம முதல் முத்தெட்டிகம வரையிலான நிர்மாணப் பணிகளையே ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

மீரிகமை முதல் கடவத்தை வரையில் அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு மூன்றரை முதல் நான்கு ஆண்டுகள் வரையில் செல்லும். இவ் அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் பொறியிலாளர்கள் எவ்வித குறைப்பாடுகளையும் இதுவரையில் முன்வைக்கவில்லை.

கடந்த அரசாங்கத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும் அவரால் அப்பணிகளை தொடர முடியாமல் போனது.

ஆரம்பத்தில் அவர்கள் திட்டமிட்ட செலவை காட்டிலும் கூடியளவு நிதி செலவானதாகக் குறிப்பிட்டு கணக்கறிக்கை சமர்பித்தார்கள்.

எதிர்வரும் மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளுக்குள் கண்டி அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை நிறைவுச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நாம் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளோம். 2015 ஆம் ஆண்டு நாம் ஆரம்பித்த திட்டம் நடைமுறைப்படுத்ப்பட்டிருந்தால் இப்பாதையின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்திருக்கும். இத்திட்டங்களுக்காக நாம் எவ்வித நிதி தட்டுப்பாடுகளுக்கும் முகங்கொடுக்கவில்லை.

குருணாகல் வரையிலான பாதையின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஜூன் 31 திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமென நாம் உறுதியாக அறிவித்துள்ளோம். 

ஆனால் நாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பிரதான பிரச்சினை இப்பாதையின் நிர்மாணப்பணிகளின் ஒப்பந்தத்தை ஜக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளமையாகும்.

குறித்த அமைச்சராலேயே இப்பாதையின் நடுப்பகுதி நிர்மாணிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் நிர்மாணப் பணிகள் பின்தங்கிய நிலையிலுள்ளன. இது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமல்ல. எம்முடைய அரசாங்கம். அவர்கள் அரசியல் பலத்தின் ஊடாக ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

அது அவர்களுடைய கொள்கை. எம்முடைய கொள்கை அல்ல. ஜூன் 31 ஆம் திகதிக்குள் இந்நிர்மாணப் பணிகளை நிறைவுச் செய்யவில்லையாயின் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.