(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் திட்டமிட்ட படி மார்ச் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். இதனை வைத்து யாரும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கக் கூடாது என்று மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தால் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் தேர்தலை நோக்காகக் கொண்டு அந்த மக்கள் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்றும் வெளியாகிய விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கம்பனிகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியதும் தேயிலை சபையில் கடன் பெற்று 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நான் கூறியதும் இரு வேறு கருத்துக்களாக இருந்தாலும் இவ்விரண்டு நடவடிக்கைகளுமே முன்னெடுக்கப்படவுள்ளன.

கம்பனிகளுடன் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நாம் கலந்துரையாடிய போது சில கம்பனிகள் அரசாங்கம் வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. சில கம்பனிகள் தேயிலை சபையிலிருந்து கடன் பெற்று சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எனவே அதற்கேற்பவே சம்பள அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் நோக்கத்துக்காகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் இலாபம் தேடுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தேர்தலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப மார்ச் முதலாம் திகதி முதல் அந்த மக்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். போலியான விமர்சனங்களால் யாரும் கலவரமடையத் தேவையில்லை என்றார்.