(செ.தேன்மொழி)

இரத்தினபுரி மற்றும் ஹபராதுவ பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரத்தினபுரி - வேவெல்வத்தை வீதியில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த முச்சக்கர வண்டி மோதுண்டதில் சாரதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது காயமடைந்த சாரதியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வலை பகுதியில் காலை 6.20 மணியளவில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வேவெல்வத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அவரது தாயாரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார். அவரது தாயார் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை ஹபராதுவ - பலுகஸ்வௌ பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி பெண்ணொருவரும் ,இரு சிறுவர்கள இருவரும் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஹபராதுவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்ததுடன் , இவர்கள் அனைவரும் ஹபராதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.