(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அரசாங்கம் எந்த அடிப்படையில் அதிகரித்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி , பொதுத் தேர்தலை நோக்கமாகக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்படக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியது.


பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெறுமனே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையினால் மாத்திரம் சம்பளத்தை அதிகரித்துவிட முடியாது.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பிலும், அரசாங்க பேச்சாளரின் ஊடக சந்திப்பிலும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இரு வேறுபட்ட கருத்துக்களே முன்வைக்கப்பட்டன.

பெருந்தோட்டக் கைத்தொழில்  அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, 'கம்பனிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது ' என்று கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்க பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அழுத்கமகே தேயிலை சபையிடமிருந்து கடன்பெற்று அதன் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட்டிப்பதாகக் கூறுகின்றார். இவ்வாறு அரசாங்க தரப்பினரிடமிருந்தே மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சம்பள அதிகரிப்பு தேர்தலை நோக்கமாக்கக் கொண்டதா அல்லது உண்மையில் மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.