(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் தவறான விடயமாக இருந்தாலும் அவை கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறிருந்தன  என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிமல் ரத்னாயக்க கூறுகையில், 

கேள்வி : ரஞ்சன் ராமநாயக்க கைது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? 

பதில் : ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை நீதித்துறை சார்ந்த விவகாரமாகும். அவை சரியென்றோ அல்லது தவறென்றோ கூறுவதற்கு எமக்கு அதிகாரமில்லை. 

எனினும் இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி பதிவு செய்வது சட்ட விரோதமாகும். ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு சட்டவிரோத செயலைச் செய்திருந்தாலும் அதிலிருந்து கடந்த ஆட்சி காலத்தில் நிர்வாகம் எவ்வாறு காணப்பட்டது என்பது தெளிவாகின்றது. 

கேள்வி : உங்களுடனான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளும் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறதே ? 

பதில் : நாம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் அனைவருடனும் உரையாடுவோம். எனினும் நாம் யாருடனும் எவ்விதமான தனிப்பட்ட விடயங்கள் பற்றியும் பேசியதில்லை. எனவே எமது குரல் பதிவுகள் வெளியிடப்பட்டாலும் நாம் அஞ்ச வேண்டிய தேவை இல்லை.