ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற  மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது.

ரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில்  பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

கிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின்னரே புட்டின் புதிய பிரதமரைஅறிவித்துள்ளார்.

ரஸ்ய அரசாங்கம் முழுமையாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் நேற்று அறிவித்திருந்தார்.

ரஸ்யாவின் அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்களை வழங்கும் யோசனையை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் பதவி விலகுகின்றமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியின் இந்த யோசனைகள் அவர் அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிப்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 முதல் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்துவரும் புட்டினின் பதவிக்காலம் 2024 இல் முடிவிற்கு வருகின்றது.

தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை புட்டின் இன்னமும் அறிவிக்கவில்லை.

ரஸ்யாவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியாது என்பதால் புட்டின்  தொடர்ந்தும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ரஸ்யாவின் அரசமைப்பை மாற்றி நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கும் யோசனையை புட்டின் வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவின் அரசியல் உயர்குழாத்தினருக்கான வருடாந்த உரையிலேயே புட்டின் தனது இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இவை மிகவும் தீவிரமான மாற்றங்கள் என தெரிவித்துள்ள புட்டின்  நாடாளுமன்றமும் சிவில் சமூகமும் இந்த மாற்றங்களிற்கு தயார் என நான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஏதாவது ஒரு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபடி ஆட்சி செய்வதற்கு புட்டின் திட்டமிட்டு வருகின்றார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்த பின்னர் 2024ற்கு பின்னர் பிரதமராகி அதிகாரத்தை தொடர்வதற்கு புட்டின் முயல்கின்றார்எனவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன