(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பின்வாங்குவதிலிருந்து சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த மக்களின் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, நாட்டில் இரண்டாம் ராஜபக்ஷ ஆட்சி உருவாகிவிட்டாதகவும் விசனம் தெரிவித்தார்.

பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் இன்று  வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பரவலாக கருத்துக்களை கூறி வந்தது.

ஆனால் தற்போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கை தேவையற்றது என்று கூறுகின்றது. இதன் மூலம் மத்திய வங்கி விவகாரத்தில் ராஜபக்ஷ தரப்பினரும் தொடர்புபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுக்கின்றது.

எனவே மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகரிடம் வலியுறுத்துவோம்.

புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சில முக்கிய அரச திணைக்களங்களுக்கு தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படாமலுள்ளனர். மேலும் சில முக்கிய அரச சேவைகளில் ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றிலிருந்து இரண்டாம் ராஜபக்ஷ ஆட்சி உருவாகியுள்ளமை தெளிவாகின்றது.

பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களை விடவும் தற்போதைய அரசாங்கமே அது தொடர்பிலான ஆவணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.