(ஆர்.விதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையப்படுத்தி மதவாதத்தை தூண்டி ஆட்சிப்பீடம் ஏறிய  தற்போதைய  அரசாங்கம்  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாகியுள்ளது என   தெரிவித்துள்ள  எதிர்க்கட்சி , ஆட்சிக்கு  வந்த  இரு நாட்களில் பிணை முறி மோசடியாளர்களை கைதுசெய்வதாக மார்தட்டியது. ஆனால் இன்று வரை எந்த கைதும்  இடம்பெறவில்லை  என்றும் குற்றம்  சுமத்தியுள்ளது.  

எதிர்க்கட்சித்தலைவர்  காரியாலத்தில்   இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின்  குருணாகலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  ஜே.சீ. அலவத்துல மேலும் கூறியதாவது ,

ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.  

மத்தியவங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை   தாம் ஆட்சிக்கு வந்த  இருநாட்களுள் கைதுசெய்து சட்டத்தின் முன்  நிறுத்துவதாக தற்போதைய  ஆளும் தரப்பினர்    தேர்தல்  பிரசார  நடவடிக்கைகளின் போது கூறிக்கொண்டனர்.  

ஆயினும் அதற்கான  எந்த நடவடிக்கைகளும் இது வரையில்  முன்னெடுக்கப்படவில்லை. பாரிய  அளவில் நிதி செலவிடப்பட்டு கோப் குழுவின் ஊடாக  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டன.   கோப்  குழு அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.  இந்த அரசாங்கம் அதனை மூடி மறைக்கும் வகையிலான  செயற்பாடுகளையே  மேற்கொண்டு வருகின்றது.

அதேபோல் , உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை  மையமாக  கொண்டு  அரசியல் இலாபம் உழைக்கவே  இவர்கள்   முயற்சித்தனர்.

தேர்தல் பிரசார  நடவடிக்கைகளின் போது  உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல்களை  மையமாக  கொண்டு எமது அரசாங்கத்தின்  மீது   குற்றஞ்சுமத்தினர்.  தாம் ஆட்சிக்கு வந்தால்   தாக்குதல்களுடன் தொடர்புடைய  குற்றவாளிகளை  கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்துவதாகவும், அந்த தாக்குதலுடன்  தொடர்புபட்டவர்களை  தமது அரசாங்கத்தில்  இணைத்துக்கொள்ள போவதில்லை  எனவும்  கூறினர்.  

இப்பொழுது அவர்கள்  மீது சட்ட நடவடிக்கை  எடுக்க  முடியுமே.  எதற்காக  இது வரையில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.