நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா வில் பதக்கங்கள் வென்ற வீர, வீராங்க னைகளையும் பயிற்சியாளர்களை­யும் கெளரவித்து பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம்  கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்குமாக விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் மொத்தமாக 85 மில்லியன் ரூபா பணப் பரிசு வழங்கப்பட்டது.

கல்வி, இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, அமைச்சரும் கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க, விளையாட்டுத் துறை அமைச்சு அதிகாரிகள் ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு பணப் பரிசில்களை வழங்கினர்.