சொந்தக் காசில் சூனியம் செய்து கொள்­வ­து­போல சிலர் தமக்கு தமது சமூ­கத்­துக்கு தமது நாட்­டுக்கு வலிந்து தீமை­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­துண்டு. எமது இலங்கைத் தீவுக்கும் அதே நிலையே ஏற்­பட்­டுள்­ளது என்­பதை துணிந்து கூறலாம். அது மட்­டு­மல்ல, குரங்கின் கை பூமாலை  என்­ப­தற்­கேற்ப நமது நாடு பெற்ற சுதந்­தி­ரத்தின் பெறு­பேறும் அமைந்­து­விட்­டது என்று தயங்­காமல் கூறலாம்.  நந்­த­வ­னத்­திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குய­வனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்­தாடி கூத்­தாடி போட்­டு­டைத்­தாண்டி என்ற வரி­களும் நமது நாட்டைப் பொறுத்­த­வரை இன்றும் உயிர்ப்­புள்­ள­தா­கவே இருக்­கின்­றது.

வர­லாற்­றுக்­காலம் முதல் பல தனித்­தனி நாடு­க­ளாக ஆளப்­பட்ட தீவா­கவே இலங்­கைத்­தீவு இருந்­துள்­ளது. தனி நாடு­க­ளாக இயங்­கிய தீவின் அனைத்து நாடு­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்த பிரித்­தா­னியர் 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நான்காம் திகதி இலங்கை என்ற பெயரில் ஒரு நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்தி சுதந்­திர நாடாக்­கினர். தமிழில் ‘இலங்கை’ என்றும் சிங்­க­ளத்தில் ‘லங்கா’ என்றும் ஆங்­கி­லத்தில் ‘சிலோன்’ என்­றும்­பெயர் கொண்­ட­தாகப் பிரித்­தா­னி­யரால் உரு­வாக்­கப்­பட்ட இலங்­கைத்­தீவு தனி நாடாக உலக வரை­ப­டத்தில் இடம்­பெற்­றது. இவ்­வாறு இலங்­கைத்­தீவை ஆக்­கி­ர­மித்து ஆட்சி செய்த பிரத்­தா­னி­யரால் ஒன்­றி­ணைந்த ஒரு நாடாக, சுதந்­திர நாடாக, தன்­னாட்­சி­யுள்ள நாடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இலங்­கையில் அதை­யாண்­ட­வர்­களின் பிரி­வி­னை­வாத சிந்­த­னை­களால் கடந்த எழு­பத்­தி­ரண்டு ஆண்­டு­க­ளாக இனங்­க­ளுக்­கி­டையே பிள­வு­களும் பிரச்­சி­னை­களும் இன மத கல­வ­ரங்­களும் பெருகி பல அவ­லங்கள் தொடர்­வதைக் காணலாம்.

சுதந்­திரம் என்­பது புனி­த­மா­னது, பெறு­ம­தி­யா­னது, போற்­று­த­லுக்­கு­ரி­யது என்று உலகம் உரைக்­கின்­றது. சுதந்­திர நாடொன்றில் வாழும் அனைத்து மக்­களும் சமத்­துவம், சகல அடிப்­படை உரி­மை­க­ளையும் அனு­ப­விக்கும் உரிமை, பாகு­பாடு காட்­டப்­ப­டாமை, உரிய கல்வி, தொழில், பாது­காப்பு என்று பலவும் கொண்­ட­வர்­க­ளாக நிம்­ம­தி­யாக எது­வித அச்­ச­மு­மின்றி வாழக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருப்­பது அவ­சி­ய­மாகும். சுதந்­தி­ர­மென்­பது ஒரு நாட்டில் வாழும் ஒரு குறிப்­பிட்ட இனத்­துக்கோ மதத்­துக்கோ கட்­சி­யி­ன­ருக்கோ வர்க்­கத்­தி­ன­ருக்கோ என்று வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல. உலகம் ஏற்றுக் கொண்­டுள்ள அடிப்­படை மனித உரி­மைகள் அனைத்­தையும் மற்­ற­வர்­க­ளது வாழ்­வு­ரி­மைக்குப் பாதிப்­பில்­லாத முறையில் அனு­ப­விக்கும் சட்ட பூர்­வ­மான மனித உரிமை உரித்­து­டை­யது என்­ப­தாகும். அதையே உல­கமும் சுதந்­தி­ர­மென்று ஏற்றுக் கொண்­டுள்­ளது.

எமது இலங்கைத் தீவா­னது பிரித்­தா­னியர் ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­திரம் என்ற  பெயரில் சுதே­சி­களின் ஆட்­சிக்கு மாறி­ய­போது இலங்­கையில் வாழும் மக்கள் பிர­தான மூன்று பிரி­வி­ன­ராக கொள்­ளப்­பட்­டனர். தமி­ழர்கள், கண்டி சிங்­க­ள­வர்கள், கரை­நாட்டு சிங்­க­ள­வர்கள் என்­பது அது.  தமி­ழர்கள் என்­போரில் தமிழ் மொழி­யை தாய் மொழி­யாகக் கொண்ட இந்­துக்கள், இஸ்­லா­மியர்கள், கத்­தோ­லிக்கர்கள், கிறிஸ்­தவர்கள் ஆகியோர் அடங்­கிய ஒரே இனத்­த­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

சிங்­க­ளவர் என்போர் சிங்­கள மொழி பேசும் கண்டி சிங்­க­ளவர் என்றும், கரை நாட்டு சிங்­க­ளவர் என்றும் இரு பிரி­வு­களில் அடக்­கப்­பட்­ட­துடன் அவர்­களின் சம­யங்­களில் அதிக அள­வி­லான பெளத்­தர்­களும் சிறு அள­வி­லா­ன­ராக கத்­தோ­லிக்கர் மற்றும் கிறிஸ்­வர்­களும் அடங்­கி­யி­ருந்­தனர்.

பிரித்­தா­னி­யர்­களால் இவ்­வாறு  வகைப்­ப­டுத்­தப்­பட்ட இனப் பிரி­வு­களில் சுதந்­திர இலங்­கையில் தமி­ழர்கள்  என்ற பிரிவு இலங்கைத் தமிழர், இந்­தியத் தமிழர், முஸ்­லிம்கள் என்று மூன்று பிரி­வு­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்டு மூன்று இனத்­த­வர்­க­ளாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டனர். அதே­வேளை கண்டி சிங்­க­ளவர், கரை­நாட்டு சிங்­க­ளவர் என்று இரு பிரி­வி­ன­ரா­க­வி­ருந்த சிங்­க­ள­வர்கள் இரு பிரி­வி­னரும் சிங்­க­ளவர் என்ற ஒரே பிரிவில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். பெரும்­பான்­மை­யினர் ஒரு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்ட அதே வேளை ஒரு பிரி­வி­ன­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தமி­ழர்கள் சிறு­பான்­மையினர் மூன்று பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு சிறு சிறு பிரி­வி­ன­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டனர். இது சுதந்­திரம் பெற்றுத் தந்த பாத­க­மாக அமைந்து விட்­டது.

அதே­வேளை சுதந்­திர இலங்­கையில் அன்று நடை­மு­றையில் இருந்த சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பின் இரு­பத்­தி­யொன்­பதாம் பிரிவில் சிறு­பான்­மை­யி­னரைப் பாதிக்கும் ஏதா­வது சட்­ட­மொன்று பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­டு­மானால் அச்­சட்­டத்­துக்கு சிறு­பான்­மை­யினப் பிர­தி­நி­தி­களின் ஆத­ரவு வேண்­டு­மென்று கூறப்­பட்­டி­ருந்தது. சுதந்­திரம் கிடைத்து சுதே­சி­களின் ஆட்சி உரு­வாகி பத்து ஆண்­டு­க­ளுக்­குள்­ளேயே அர­சி­ய­ல­மைப்பின் அந்த விதி மீறப்­பட்­டது.  முத­லா­வது பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்­களின் குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை என்­பன பறிக்­கப்­பட்டு அவர்கள் நாடற்­ற­வர்­க­ளா­க்கப்­பட்ட சட்­டமும்  அதே போல் மூன்­றா­வது பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட சிங்­களம் மட்டும் நாட்டின் ஒரே ஆட்சி மொழி­யென்ற தமிழ் மொழியை தமி­ழர்­க­ளைப் புறக்­க­ணிக்கும் சட்­டமும்  அர­சி­ய­ல­மைப்பை இலங்­கையின் அதி உயர் சட்­ட­வாக்க நிறு­வ­ன­மான பாரா­ளு­மன்றம் எட்டி உதைத்த, கறை­ப­டிந்த, இன­வெ­றி ­ப­யங்­க­ர­வாத, பிரி­வினைவாத சிந்­த­னையை நாட்டில் கட்­டி­யெ­ழுப்­பிய சுதந்­திரம்  என்ற சொல்லை இழி­வுப்­ப­டுத்­தி­ய­வை­யாகும்.

உலகின் உயர்ந்த கல்வி நிறு­வ­னங்­களில் கற்­ற­வர்கள் பரந்த சிந்­த­னையும் தூர­நோக்கும் கொண்­ட­வர்­க­ளாக நாடாளும் தகைமை பெற்­ற­வர்­க­ளாக இருப்பர் என்று நம்­பப்­ப­டு­கின்­றது. அந்த வகை­யிலே பிரித்­தா­னி­யாவில் ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக் ­க­ழகம் உயர் நிலையில் இன்றும் போற்­றப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றுள்ள நிலையில் குறித்த  அப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயின்று பட்டம் பெற்ற நம் நாட்டின் அர­சியல்வாதி­களின் செயற்­பா­டுகள் அப்­பல்­க­லைக்­க­ழகக் கல்­வியின் தரத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் பல்­க­லைக்­க­ழ­கமான ஒக்ஸ்­போர்டில் கல்வி கற்­ற­வர்கள் பிரித்­தா­னி­யரால் இலங்­கையின் குடி­மக்­க­ளாக ஏற்று  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இந்­திய வம்­சா­வளித் தமிழ் மக்­களின் குடி­யு­ரிமை மற்றும் வாக்­கு­ரி­மை­களை பறிக்­கவும் அதேபோல் இந்­நாட்டின் பாரம்­ப­ரிய மக்­க­ளான தமிழ் மக்­களின் மொழி­யு­ரி­மையை பறிக்­கவும் முன்­னின்று செயற்­பட்­ட­மை­யா­னது கடல் கடந்து பிரித்­தா­னி­யா­வுக்கு சென்று கல்வி கற்றும் நாட்டை, நாட்டு மக்­களை சமத்­து­வ­மாக, ஒற்­று­மை­யாக, நிம்­ம­தி­யாக வாழ வழி அமைக்கத் தெரி­யாத கல்­வியின் தரத்தை, பெறு­ம­தியை கேள்­விக்­கு­றி­யாக்­கு­கின்­றது.

சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் பல பறிக்­கப்­பட்­டதும் மறுக்­கப்­பட்­டதும் அவர்கள் பல்­வேறு இழப்­பு­க­ளுக்கு உட்படுத்தப்பட்டதும் இலங்கையர் என்ற ஒன்றுபட்ட இன உணர்வை நாட்டுபற்றைக் கேலிக்குரியதாக்கியுள்ளது.  சுதந்திரம் என்ற புனிதமான பூமாலை அதன் பெறுமதியைப் புரிந்து கொள்ள முடியாத  குரங்கின் கையில் அகப்பட்டு சிதைத்து  சீரழிவதைப் போன்றும் நந்தவனத்திலோர் ஆண்டி அவன் கிடைத்த  பானையை அதன் பெறுமதியை அறியாது துள்ளிக் குதித்துக் கூத்தாடிப் போட்டுடைத்தது  போன்றும் ஆறறிவு கொண்ட  மனிதர்களாக கொள்ளப்படும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில்  இனவுறவுக்கு உலைவைத்ததுடன் இனவெறி பிரிவினைவாத பயங்கர­வாதத்துக்கும் தப்பாமல் ஊக்கமளித்து   சொந்த  நாட்டைச் சீரழிக்க சூனியம் செய்து விட்டார்கள்  என்றே கூறவேண்டும். பேரினவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளே நாட்டில் பிரிவினை வாத சிந்தனையின் பிதாமகர்களாவர்.

த.மனோகரன்