தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக இன்று தெரிவித்தார்.

தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை ஸ்தாபிக்கவும் தகவலை பெறுவதற்கான நடவடிக்கைகளை வழங்கவும் அதனுடன் தொடர்புள்ள விடயங்களை மேற்கொள்ளவும் குறித்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிரஜை ஒருவருக்கு ஏதும் நிறுவனத்தின் உடமை அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள தகவலைப் பெற உரிமை வழங்கப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், அரசின் பாதுகாப்பு, தேசிய நலன் தொடர்பான தகவல்கள், ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர்வதை தடுக்கும் தகவல்கள், வரி விதிப்புகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், பரீட்சை திணைக்கள அல்லது உயர்கல்வி நிறுவன பரீட்சைகளுக்கு இடையூறான தகவல்கள் என்பன வழங்குவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. 

தகவல்கள் கோரினால் அதனை வழங்குவதை மறுக்க முடியாது எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் பெற விண்ணப்பமொன்றை நிரப்ப வேண்டும் என்பதோடு ஆணைக்குழு முடிவு செய்யும் கட்டணமொன்றையும் செலுத்த வேண்டும்.