(எம்.ஆர்.எம்.வஸீம்)

மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. மாறாக தேர்தலை இலக்குவைத்து அல்ல. கம்பனிகளுடன் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கே மார்ச் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்க தீர்மானித்திருக்கின்றோம் என அரசாங்க ஊடக பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலைய மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்திருந்தனர். என்றாலும் கோத்தாய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருவதாக வாக்குறுதுயளித்திருந்தார். அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மக்கள் வாக்களிக்காவிட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் பல மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் 1000 ரூபாவை சொல்லியே தேர்தலில் அந்த மக்களின் வாக்குகளை பெற்றுவந்தார்கள். தேர்தலுக்கு முன்னர் 50 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தார்கள். அதனையும் வழங்காமல் ஏமாற்றினார்கள். மலையக அரசியல்வாதிகள் கடந்த 5 வருடங்களில் மலையக மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. மலையகத்தின் அபிவிருத்திக்கும் எதனையும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்க தீர்மானித்திருக்கும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் பொதுத்தேர்தலை அடிப்படையாகக்கொண்டு மேற்கொண்டுள்ளதாக சிலர் தெரிவிக்கலாம். ஆனால் பொதுத்தேர்தல் ஏப்ரல் இறுதியிலே இடம்பெறவாய்ப்பு இருக்கின்றது. நாங்கள் மார்ச் முதலாம் திகதியில் இருந்து பெற்றுக்கொடுக்க தீர்மானித்திருக்கின்றோம். கடந்த 5வருடகளில் முடியாமல்போனதை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 56 நாட்களுக்குள் நிறைவேற்றி இருக்கின்றது. இந்த ஆயிரம் ரூபா சம்பளத்தை அரசாங்கமும் தோட்டக்கம்பனி உரிமையாளர்களும் இணைந்தே வழங்க இருக்கின்றோம். அதனால் கம்பனி காரர்களுடன் இதுதொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் காரணமாகவே மார்ச் முதலாம் திகதியில் இருந்து வழங்க தீர்மானித்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.