(நா.தனுஜா)

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு அவருக்கு கட்சித்தலைவர் பதவியோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ தேவைப்படவில்லை. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கும் அத்தகைய பதவிகள் எவையும் தேவைப்படவில்லை. 

எனவே எவரேனும் தமது இயலாமையை இத்தகைய பதவிகளால் மறைத்துக்கொள்ள முடியும் என்று நினைத்தால் அது மிகவும் முட்டாள்தனமான சிந்தனையாகும். 

ஆகவே கட்சித் தலைமைத்துவத்தைத் தாக்கிப்பேசுவதன் ஊடாக கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாதிக்கப்படுவது மாத்திரமே இடம்பெறும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போதைக்கு எந்தவொரு மாற்றமும் ஏற்படவேண்டிய அவசியமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகளுக்கு எவ்வாறு தீர்வுகாணப்படப் போகின்றது என்று அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உண்மையில் கட்சியின் தலைமைத்துவ நியமனம் ஐக்கிய தேசியக் கட்சி யாப்பின் பிரகாரமே இடம்பெற்றிருக்கிறது. தேர்தல்களில் தோல்வியடைவதை கட்சியின் வேட்பாளர்களும், கட்சியும் ஏற்றுக்கொள்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். 

எமது கட்சிக்குள்ளும் சில கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் நாட்டின் ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஒருங்கிணைந்தே ஐக்கிய தேசியக் கட்சியும் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஏனைய கட்சிகளின் யாப்பு மற்றும் எமது கட்சியின் யாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டியிருக்கிறது.

குறிப்பாக நாட்டின் இரு பிரதான கட்சிகளின் யாப்புக்கள் வலுவிழக்கும் பட்சத்தில் நாடு பலத்தை இழக்கும். ஆட்சியதிகாரம் பலம் இழக்கும். அதன் காரணமாக மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வழிகள் வலுவிழக்கும். ஆகையினாலேயே சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ஏனைய கட்சிகளின் யாப்புக்களை அனுசரித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. எமது கட்சி யாப்பின் ஊடாகவே ரணசிங்க பிரேமதாஸ போன்ற தலைவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுபோன்று தற்போதும் யாப்பிற்கமைவாக அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த விருப்பிற்கமைவாகவே ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு, உகந்த விதமாக செயற்பட்டு வருகின்றார். எனவே இங்கு பிரிவினையொன்று ஏற்படுத்தப்படக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தனித்தவொரு இலக்கு மாத்திரமே தேவைப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் பேசுவதை நிறுத்தினால் கட்சி மிகப்பாரிய வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும். சஜித் பிரேமதாஸவினால் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகளவில் வென்றெடுத்துக்கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் அவர் வேட்பாளராக்கப்பட்டார். எனினும் அதனை அவரால் சாத்தியமாக்க முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட போது அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிங்கள பௌத்த வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார். அப்போது வட,கிழக்கு மாகாணங்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமையினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.