(எம்.ஆர்.எம்.வஸீம்)

நல்லாட்சி அரசாங்கத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடக்குவதற்கு பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து சிறையிலடைக்க செயற்பட்ட ரணில், ராஜித்த, சம்பிக்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப்போட்டிப்பிரச்சினையால் அவர்களே இந்த தகவல்களை எமக்கு வழங்குகின்றனர் என அரசாங்க ஊடக பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் புதன்கிழமை (15.01.2020) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிகாரப்போட்டியினால் கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அதற்காக செயற்பட்ட விதம் தொடர்பாக அந்த கட்சியினரே எமக்கு தெரிவிக்கின்றனர். 

அதனால் பொலிஸாருக்கு தெரிவித்திருக்கும் ஆலோசனையின் பிரகாரம் அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என நம்புவதுடன் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டடிருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம்.