(செய்திப்பிரிவு)

அஸர்பைஜான்  தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த  இலங்கை மாணவிகள் மூவரின்  உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான 1.5 மில்லியன் ரூபாவை  அரசாங்கம்  வழங்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு   எவ்வித மறுப்பும் இன்றி அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளது என தெரிவித்த   அமைச்சரவை பேச்சாளர் பந்துல  குணவர்தன வெளிநாடுகளில் பட்டபடிப்பினை மேற்கொள்ள செல்லும் மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பினை  முன்னெடுக்க  விரைவில்  முறையான  வழிமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை  தீர்மானங்களை  அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 இலவச  கல்வியின் ஊடாக உயர்  கல்வியினை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களே   இவ்வாறு பாரிய நிதி செலவழித்து வெளிநாடுகளுக்கு  பட்டப்படிப்பினை பெற்றுக்கொள்ள செல்கின்றார்கள். பல மாணவர்கள் இன்றும்  பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும்  உயர்கல்வி  வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அத்துடன் ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்ஷவின் இலக்கும்  நிச்சயம்  வெற்றி பெறும்.  இதற்கான நடவடிக்கைகள்  துரிதகரமாக முன்னெடுக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு  பட்டப்படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு  முறையான  வழிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும்.  என்பதை  கருத்திற்கொண்டு   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம்   அறிக்கையினை கோரியுள்ளேன்.வெகுவிரைவில்  உரிய தீர்வு   முன்வைக்கப்படும்  என்றார்.