(எம்.மனோசித்ரா)

தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்காக குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த குறுந்தகவல் சேவை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெளிவுபடுத்துகையில், 

தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் , அவை தொடர்பில் தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காகவே இவ்வாறு குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதனை தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதிலும், அதனைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுகின்றனர். 

இதன் காரணமாக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் அதேவேளை சேவை பெறுனர்களின் சிரமங்களை குறைக்கும் நோக்கில், எதிர்வரும் சில வாரங்களில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக , தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருகை தருவோர் தமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்ள முடியும் என்பதோடு, வீண் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.