(எம்.மனோசித்ரா)

நடைமுறை அரசியல் விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நாளை மாலை 7 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தின் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார். 

பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு காணப்பட்ட மக்கள் பலத்தை பொதுத் தேர்தலில் மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு காணப்படுகிறது. 

சுதந்திரக் கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் விஜித் விஜியமுனி சொய்சா போன்றோருக்கு எதிராகவும் 25 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் சனிக்கிழமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்பில் இது வரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் முற்றுமுழுதாக கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவே செயற்பட்டார். எனவே கட்சியுடன் தொடர்புடைய விடயங்களில் அவரை இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது பற்றி எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.