இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ராஜபக்சாக்களின் கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதிகள் சிலவற்றை அளித்ததுடன் நிலங்களை மீள கையளிப்பது,காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது போன்ற விடயங்களை முன்னெடுத்தது.

எனினும் இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தவறியுள்ளதுடன்,சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்க தவறியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

புதிய ராஜபக்ச அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை தான் மதிக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.