'இலங்கை சிறியதொரு நாடு. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ பூகோள ரீதியில் அதன் அமைவிடம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் காரணமாக பல்வேறு அரசியல் சவால்களுக்கு இலங்கை முகம்கொடுக்க வேண்டியுள்ளது. 

அவற்றை வெற்றிகொள்வதற்கு ஒரே வழி பொருளாதார ரீதியாக பலம் பெறுவதாகும். பொருளாதார சுதந்திரம் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்.' என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ (Wang Yi) யை நேற்றைய தினம் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சீன அமைச்சர் கடந்த காலங்களைப் போன்றே சீனா இலங்கையின் சுபீட்சத்திலும் முன்னேற்றத்திலும் நீண்ட கால பங்குதாரராக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கை உறுதியானது என்றும் சீனா எப்போதும் இலங்கையின் விசுவாசமான நண்பர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்னின் வாழ்த்துக்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்து சீன வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

ஜனாதிபதியுடனான விரிவான கலந்துரையாடலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான இருதரப்பு உறவுகள் மேலும் முன்னேற்றமடையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

சீன அமைச்சரின் வாழ்த்துக்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி,தான் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்னை மதிப்பதாகவும் அவரது உரைகள் மற்றும் கூற்றுக்களை ஆழ்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார். 

ஜனாதிபதி ஷீ ஜின் பின்னின் சில கொள்கைகளை குறிப்பாக வறுமையை ஒழிப்பது தொடர்பான விடயங்களை தனது கொள்கை பிரகடனத்திலும் உள்ளடக்கியிருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து ஜனாதிபதி சீன அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

சீனாவுக்கு தான் மேற்கொண்டுள்ள பல விஜயங்கள் பற்றி நினைவுகூர்ந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சீனா தனக்கு ஒரு புதிய நாடல்ல என்றும் குறிப்பிட்டார்.

'இலங்கையின் மூலோபாய பங்குதாரர் என்ற வகையில் சீனா தொடர்ச்சியாக இலங்கையின் அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கும். நாட்டின் இறைமை, பௌதீக ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்திற்காகவும் சீனா பக்கபலமாக விளங்கும். இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிச் சக்திகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்' என்றும் சீன அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை பொருளாதார ரீதியாக சுயாதீனமாக எழுந்திருக்கச் செய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பு பற்றி கருத்துத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சர், அடுத்த மாதம் இடம் பெறவுள்ள ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதும் தொழிநுட்பம், சுற்றுலா, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய துறைகளில் இலங்கைக்கு உதவக்கூடிய தரப்புகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அந்த விஜயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

'இலங்கையின் நிலப் பரப்பு சிறியதாயினும் மிக விரைவாக பொருளாதார ரீதியாக அது பலமடையும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும்' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan, சீன வர்த்தக அமைச்சின் பிரதி அமைச்சர் Qian Keming, சீன சர்வதேச அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு முகவர் அமைப்பின் பிரதி அமைச்சர் Zhou Liujun, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.